மாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மருமகள்!


புதுக்கோட்டை மாவட்டம் மணியம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் இவருக்கும் இவரது உறவினர் வாணியம்பட்டியைச் சேர்ந்த பிரதீபா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரதீபா ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில் பிரதீபாவை ரமேஷின் தாயார் ராஜம்மாள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் ரமேஷுடன் பிரதீபா சந்தோஷமாக வாழ விடாமல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில்,வீட்டிற்கு உள்ளே இருந்து மேற்கூரை வழியாக புகை வெளியே வந்துள்ளது.  இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று கதவைத் திறந்து பார்த்தபோது ராஜம்மாள் எரிந்த நிலையில் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது பிரதீபாவும் ஏதும் நடக்காததுபோல் அவர்களோடு சேர்ந்து கதறி அழுதுள்ளார்.


இதனைத்தொடர்ந்து அவர்களது வீட்டிற்கு சென்ற வல்லத்திராகோட்டை  காவல் துறையினர் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை பிரதீபா கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்.  


அப்போது தன் கணவனுடன் நிம்மதியாக வாழ முடியாமல் தொந்தரவு செய்ததால் மண்ணெண்ணை  ஊற்றி ராஜம்மாளை தீ வைத்ததை பிரதீபா ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து  பிரதீபாவை போலீசார் கைது செய்தனர்.