திண்டுக்கல் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டம்


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதாக பா.ஜனதா மாநில மகளிரணி தலைவி மஹாலட்சுமி கட்சியினருக்கு முகக் கவசங்களை வழங்கி பேசினார். 


திண்டுக்கல் பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம், கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி கலந்துகொண்டு, மத்திய அரசின் ஓராண்டு சாதனை குறித்து மக்களிடம் தெரிவிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார். பின்னர் கட்சியினருக்கு முகக் கவசங்களை அவர் வழங்கினார். 





பிரதமர் நரேந்திரமோடி சுயநலம் இல்லாமல் இருப்பதன் காரணமாகத்தான் மத்தியில் பா.ஜனதாவினர் 2-வது முறையாக ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு கிடைத்தது என்றும் பா.ஜனதா மந்திரிகள் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டை யாரும் சுமத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

 

தற்போது உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. மேலும் கொரோனாவால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் மாநிலங்களுக்கு தேவையான நிதி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.