நமது நாட்டைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தெலுங்கானா, தமிழகம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
இந்த இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், இந்த மாவட்டங்களின் கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்ட ஆஸ்பத்திரி சூப்பிரண்டுகள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள் ஆகியோருடன் உயர் மட்ட ஆய்வுக்கூட்டம் ஒன்றை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் காணொலி காட்சி வழியாக நடத்தினார்.இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத பகுதிகளில், கட்டுக்குள் கொண்டுவருவதற்கான உத்தி பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில், வரும் மாதங்களில் மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை உருவாக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தின்போது, நகர்ப்புறங்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் தொற்று பரவலாக இருப்பது பற்றியும், பொது வசதிகளை பகிர்ந்து கொள்ளும் பகுதிகள் குறித்தும், அங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அத்துடன், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தவேண்டியதின் முக்கியத்துவம், உடனடியாக பரிசோதனைகள் நடத்த வேண்டியதின் அவசியம், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மேலாண்மை மேற்கொள்வதின் முக்கியத்துவம் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கட்டுப்பாட்டு உத்திகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கொரோனா கட்டுக்குள் வராத பகுதிகளில் மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநிலங்களை அறிவுறுத்தியது.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் இறப்புவிகிதத்தை குறைப்பதற்காக, வயதானவர்கள், நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்து மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரிகள் விளக்கினர்.