சமுத்திர சேது: ஈரான் நாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்துவரும் பணியை துவக்கியது இந்திய கடற்படை!


பல்வேறு நாடுகளில்  தவித்துக் கொண்டிருக்கும் இந்திய குடிமக்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, இந்திய கடற்படை “சமுத்திர சேது” என்றழைக்கப்படும் பணியை கடந்த  மாதம் 8-ம் தேதியன்று துவங்கியது. இந்திய கடற்படை கப்பல்களான ஜலஸ்வா, மகர் ஆகியவை ஏற்கனவே மாலத்தீவு மற்றும் இலங்கையிலிருந்து 2874 இந்தியர்களை கொச்சி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அழைத்து வந்தன.


சமுத்திர சேதுவின் அடுத்த கட்டமாக, இந்திய கடற்படைக் கப்பல் ஷர்துல், ஈரான் நாட்டு துறைமுகமான பந்தர் அபாஸிலிருந்து இந்தியர்களை குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு அழைத்து வரும் பணியை இன்று (08.06.2020) துவக்கியுள்ளது. அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்துவரப்படும் இந்திய குடிமக்களின் பட்டியலை ஈரான் அரசு தயாரித்துள்ளது.  தேவையான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின் இவர்கள் கப்பலில் அனுமதிக்கப்படுவார்கள்.


     ஐ.என்.எஸ் ஷர்துல் கப்பலில், கோவிட் தொடர்பான  சமூக இடைவெளி நடைமுறைகள், பின்பற்றப்படுவதுடன் இந்தக் கப்பலில் இந்தியர்களை அழைத்து வருவதற்கான அனைத்து சிறப்பு வசதிகளும் – கூடுதல் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள், சத்துணவியலாளர்கள், மருந்துப் பொருட்கள், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், முககவசங்கள், உயிர்காக்கும் உபகரணங்கள் - உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.


   ஈரானிலிருந்து அழைத்துவரப்படும் இந்தியர்கள், கடல்பயணம் செய்யும்போது அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளுடன், அவசர உதவிக்கான ஏற்பாடுகளும், இக்கப்பலில் செய்யப்பட்டுள்ளன.  இவர்கள் போர்பந்தர் வந்தடைந்தவுடன், மாநில அரசு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்.