கரோனா நோய்க்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மொத்தம் 113 கரோனா ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சளி மாதிரி எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் சளி மாதிரி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கரோனா ஆய்வு செய்துகொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் ஆய்வு செய்து கொள்ளாத பலர், கரோனாவைப் பரப்பி சமுதாயத்திற்குப் பெரும் கேடு இழைக்கின்றனர்.
தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது; கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்; கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தமிழக அரசு ஆகியவை ஆலோசனைகளை வழங்கியும் சென்னை போன்ற நகரங்களில் பெரும்பான்மையினர் அதைக் கடைப்பிடிப்பதில்லை.
தமிழக அரசு கரோனா தடுப்புக்காக அதனால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஒரு கை தட்டினால் ஓசை வராது; இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை எழும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.அதன்மூலம் கரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளுக்குத் துணை நிற்க வேண்டும்.
தமிழக அரசும் பாதுகாப்பு விதிகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணிய ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.