ஜே.இ.இ., நீட் தேர்வு நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம்?


ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என்று மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்தார்

 

மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு வருகிற செப்டம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

 

இதேபோல் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.




 

கொரோனா காரணமாக இந்த தேர்வுகளை தள்ளிவைக்குமாறு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதேபோல் இந்த தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், தேர்வு அட்டவணையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது.




 

எனினும், நீட், ஜேஇ இ தேர்வுகளை தற்போதைய சூழலில் நடத்த வேண்டாம் என்று பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில்,  ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என்று கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

 

மேலும்  அவர் கூறுகையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 15.97 லட்சம்  மாணவர்களில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிக அளவு மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பது அவர்கள் தேர்வு எழுதுவதில் ஆர்வமாக இருப்பதையே காட்டுகிறது”  என்று கூறியுள்ளார்.